கோடை காலங்களில் ஜெபமாலைபுரம் குப்பை குடோனில் அடிக்கடி தீவிபத்து புகைமண்டலத்தால் மக்கள் அவதி செயல்படாத நவீன இயந்திரம் நிரந்தர தீர்வு தான் என்ன?

தஞ்சை, ஏப். 25: தஞ்சை ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பை குடோனில் கோடை காலங்களில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருகிறது. இதனால் ஏற்படும் புகைமண்டலத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குப்பை குடோனில் நவீன இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. இந்த 51 வார்டுகளில் இருந்து தினம்தோறும் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு தஞ்சை சீனிவாசபுரம் அருகே உள்ள ஜெபமாலைபுரம் குப்பை குடோனில் கொட்டப்படுகிறது. தஞ்சை நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை குறைவு. இதனால் இந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளும் குறைவாக இருந்தது. தற்போது தஞ்சை மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ள நிலையில் மக்கள் தொகையும் பெருகிவிட்டது. குப்பைகளும் அதிகமாகி விட்டது.

தஞ்சை மாநகரில் மட்டும் எங்கு பார்த்தாலும் தனியார் ஓட்டல்களும், இரவு நேரத்தில் தள்ளுவண்டிகளில் ஓட்டல்களும் செயல்படுவது அதிகமாக உள்ளது. இதனால் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை விட ஓட்டல்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் அதிகளவில் உள்ளது. இதுதவிர திருமண மண்டபங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு ஜெபமாலைபுரம் குப்பை குடோனில் தான் கொட்டப்படுகிறது. தஞ்சை நகராட்சியாக இருந்தபோது நகரின் ஒதுக்குப்புறமாக இருந்த காரணத்தால் ஜெபமாலைபுரத்தில் குப்பை குடோன் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று தஞ்சை மாநகரின் மைய பகுதியாக இந்த பகுதி மாறிவிட்டது. தஞ்சை சீனிவாசபுரம் என்று சொன்னால் தஞ்சை நகரில் விஐபிக்கள் வசிக்கும் ஏரியா என்று சொல்லப்படும் அளவுக்கு மாறிவிட்டது. இப்படி இருப்பதால் குப்பைகள் சேகரிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

குப்பை குடோனில் ஆரம்ப காலத்தில் சேகரிக்கும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என்று பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கி அதை விற்பனை செய்து வந்தனர். மக்காத குப்பைகளை தனியாக பிரித்து வைத்து ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தஞ்சையை சுற்றியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இது காலபோக்கில் மறைந்து போய்விட்டது. இதற்காக மக்கும் குப்பைகளை தரம் பிரித்து அதை காய வைத்து உரமாக்குவதற்காக ஜெர்மனி நாட்டில் இருந்து மிஷின் வரவழைக்கப்பட்டது. ஆனால் அந்த மிஷின் செயல்படாமல் அப்படியே வைத்துவிட்டனர்.

இதனால் அந்த மிஷின் இன்று குப்பை குடோனில் காட்சிப்பொருளாக உள்ளது. கடந்த முறை ஆளும்கட்சியை சேர்ந்தவர் தஞ்சை மாநகராட்சி மேயராக இருந்தார். அவர் காலத்தில் தஞ்சை மாநகராட்சி குப்பை குடோனில் உள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற முடியாத காரணத்தால் மிகப்பெரிய அளவில் குழிதோண்டி அதில் குப்பைகளை கொட்டி மூடி விடுவதற்காக டெண்டர் விடப்பட்டது. பணிகள் துவங்கி 5 நாட்களில் அப்படியே நின்று போனது. மக்கள் வரிப்பணம் வீணாக போனது. இதனால் நாளுக்கு நாள் அங்கு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் உயர்ந்துவிட்டது. இதன் விளைவு தான் கோடைகாலங்களில் குப்பை குடோன்களில் திடீரென தீப்பிடித்து எரிகிறது.

தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக குப்பைகள் எரிந்தால் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரே புகைமண்டலமாக காட்சியளிக்கும். இந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை காலி செய்து கொண்டு அருகில் உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்று விடுவர். இந்த நிலையை மாற்ற வேண்டும். தஞ்சை நகரின் மையப்பகுதியில் உள்ள குப்பை குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென தஞ்சை பகுதி மக்கள் கோரிக்கை வைத்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் எந்தவித பயனும் இல்லை.

குப்பை குடோனில் இனிவரும் காலங்களில் தஞ்சை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டாமல் நகரின் வெளியில் கொட்டுவதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குப்பை குடோனில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாநகரில் 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என்று 51 வார்டுகளிலேயே தற்காலிகமாக பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கி அதை விற்பனை செய்வதற்காக முயற்சியெடுக்க வேண்டும். மக்காத குப்பையை மாநகரின் வெளியில் கொண்டு சேகரிக்க முயற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு சில முயற்சிகளை எடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை குடோனில் கோடை காலங்களில் திடீரென தீப்பிடித்து எரிவதை தடுக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?

குப்பை குடோன் அமைந்துள்ள இடம் அருகில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான நகர் கிளை பணிமனை அமைந்துள்ளது. குப்பை குடோனில் தீப்பிடித்தால் அங்கிருந்து நெருப்புபொறி தவறி விழுந்தால் போக்குவரத்து பணிமனை முற்றிலும் சேதமடைந்து விடும். எனவே குப்பை குடோனை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென போக்குவரத்து தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் யார் கோரிக்கை வைத்தாலும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

Related Stories: