நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

தஞ்சாவூர், ஏப். 25: நூல்களை மறுபதிப்பு செய்ய தமிழக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். உலக திருக்குறள் பேரவை செயலாளர் மாறவர்மன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் விற்பனையை துவக்கி வைத்தார். தமிழ்ப் பல்கலைகழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன்  பேசுகையில், உலக தமிழர்களின் இலக்கிய வேடந்தாங்கலாக திகழ்வது தமிழ் பல்கலைக்கழகமாகும். பிற பல்கலைக்கழகங்களுக்கு இல்லாத சிறப்பு தமிழ்மொழியின் பன்முக தன்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் பதிப்புத்துறை மற்றம் அச்சகம் துவங்கப்பட்டுள்ளது. இதுவரை பதிப்புதுறையின் வழியாக 452 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விற்பனைகாக தற்போது இருப்பில் உள்ளவை 25 நூல்களாகும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்புதுறை வெளியீடுகளை மறுமதிப்பு செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடி வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.8 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு முதல்கட்டமாக ரூ.2 கோடி பெறப்பட்டு 225 நூல்கள் மறுபதிப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் ரூ.13 லட்சத்தில் புதிய நூல்கள் அச்சிடும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு இன்று முதல் மே 8ம் தேதி வரை 15 நாட்கள் 50 சதவீத தள்ளுபடியில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு ரூ.3.50 லட்சம் வரை நூல் விற்பனை நடந்தது. இந்தாண்டு அது இரட்டிப்பாகும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிப்புத்துறை இயக்குனர் ஜெயகுமார், பதிவாளர் முத்துகுமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: