கிராமப்புற கோயில்கள் திருப்பணிக்கான ரூ.1 லட்சம் பிடித்தமின்றி கிடைக்க வேண்டும் பூசாரிகள் நலச்சங்கம் கோரிக்கை

தஞ்சை, ஏப்.25: தமிழக அரசால் கிராம புறக் கோயில்கள் திருப்பணிக்காக வழங்கும் ஒரு லட்சம் நிதியை எவ்விதப் பிடித்தமும் இன்றி முழுமையாக கோயில் திருப்பணி க்கே கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று பூசாரிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலசங்க மாநிலத் தலைவர் வாசு, தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:

கிராமப்புறங்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் ஒரு கால பூஜைக்கே வழி இல்லாத பல கோயில்கள் உள்ளன. இதில் சிதிலமடைந்த சில கோயில்களை சீரமைக்க திருப்பணி நிதி என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கி வந்தது.

தற்போதைய விலைவாசி உயர்வில் இந்தத் தொகை திருப்பணிக்கு போதாது. இதனை ரூ.1 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ரூ.1லட்சமாக அரசு உயர்த்தியது. ஆனால் ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட பல்வேறு வகை பிடித்தங்களால் கிராமப்புற கோயில்கள் இந்தத் தொகையை முழுமையாக பெற முடியவில்லை என பக்தர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டுகளில் திருப்பணி நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கி வந்த போது அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த திருப்பணிக் கமிட்டியினர் தாங்களே அத் தொகை யை முழுமையாகப் பயன்படுத்தி கோயில் திருப்பணிகளை செய்து வந்தனர். ஆனால் தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்ட பிறகு திருப்பணிக்கு மதிப்பீடு செலவு, பரிசீலனைக் கட்டணம் 2 சதவீதம் அதாவது ரூ.2 ஆயிரம், கட்டிடத் தொழி லாளர் நல நிதி கட்டணம் 1 சதவீதம் அதாவது ரூ.1000, மாநில ஜி.எஸ்.டி. வரி 6 சதவீதம் அதாவது ரூ.6 ஆயிரம், மத்திய ஜி.எஸ்.டி. வரி 6 சதவீதம் அதாவது ரூ.6 ஆயிரம், வருமான வரி 1 சதவீதம் அதாவது ரூ.1000, ஈஎம்டி ரூ.2 ஆயிரம், கோயில் பெயரில் வங்கிக் கணக்கு துவங்க ஒரு குறிப்பிட்ட தொகை என பல்வேறு வகை களில் சுமார் ரூ.20 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு மீதம் 80ஆயிரம் மட்டுமே திருப்பணிக்கு கிடைத்து வருகிறது.

இவ்வாறு பல்வேறு பெயர்களில் திருப்பணி நிதியிலிருந்து பணத்தை அரசு பிடித்தம் செய்து கொள்கிறது. இதைப்பற்றி விவரம் அறியாத கிராமப்புற மக்கள் அறநிலையத் துறை அதிகாரிகள் தான் இந்த தொகையை பிடித்தம் செய்து வருகின்றனர் என தவறாக நினைத்து வருகின்றனர்.

இத்தகைய பழிக்கு அஞ்சி பல நேர்மையான அதிகாரிகள் திருப்பணி என்றாலே சற்று தயக்கம் காட்டி ஒதுங்கி விடுகின்றனர். இதனால் திருப்பணி நிதி ஒதுக்கீடு செய்த சில கோயில்கள் பணிகள் நடைபெற முடியாமல் முடங்கி உள்ளது. கிராமப்புற கோயில் திருப்பணி நிதியுதவி என்பது ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வருவாய் இல்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியாகும். இதில் பல்வேறு வகைகளில் வரிப் பிடித்தம் செய்வது எவ்வகையில் நியாயம் எனத் தெரியவில்லை. பெரிய கோயில்களில் அனுமதியின்றி உபயதார்கள் மூலம் பல லட்சம் செலவில் பணிகளை மேற்கொள்வோரிடம் அரசும் அறநிலையத்துறையும் எவ்விதப் பிடித்தமும் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால் பாமர மக்கள் கோயிலுக்கு மொத்த திருப்பணி நிதியில் ஐந்தில் ஒரு பங்குத் தொகை பிடித்தம் செய்வது முறையா என்பதை மத்திய, மாநில அரசும் அறநிலையத்துறையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிராமப்புற கோயில் திருப்பணிக்கு ஒதுக்கப்படும் ஒரு லட்சம் நிதியை எவ்வித பிடித்தமும் இன்றி முழுமையாக திருப்பணிக்கு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: