×

கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் புதுகை நாட்டுக்கோழிகளுக்கு அமோக வரவேற்பு மக்கள் அதிகம் விரும்புவதால் கிராம மக்கள் சுறுசுறுப்பு

புதுக்கோட்டை, ஏப்.25:  புதுக்கோட்டை மாவட்டத்தில் வாங்கப்படும் நாட்டுகோழிகளை கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி அதிகரித்து வருவதாக நாட்டுக்கோழி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் 90 சதவீம் பேர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 497 பஞ்சாயத்துகளில் உள்ள குக்கிரமங்களில் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. விவசாயம் குறைய குறைய கால்நடை வளர்ப்பும் குறைந்து வருகிறது. இந்நிலையில் கிராமங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. கிராமங்களில் நாட்டுகோழி வளர்ப்புக்கு பெரிய அளவில் பொருட்செலவு ஏற்படுவதில்லை. நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்கி விட்டுவிட்டால்போதும். அதற்காக நாம் பெரிய அளவில் சிரமப்பட தேவையில்லை. வீட்டில் உள்ள வைக்கோல் போரில் உள்ள நெல்களை சாப்பிட்டு உயர்வாழும். அதேபோல் வீட்டில் அருகே உள்ள வயல்பகுதிக்குசென்று மேய்ந்துவிட்டு வந்துவிடும். இதபோல் இரவு நேரத்தில் வீட்டில் உள்ளவர்கள் கோழிகளை பிடித்து அடைத்து வைக்க தேவையில்லை. வீட்டின் அருகே உள்ள மரங்களில் தானாகவே வைத்து அடைந்துவிடும்.

இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை. இதனால் கிராமங்களில் ஏழை, பணக்கார் என அனைத்து வீடுகளிலும் நாட்டுகோழிகள் வளர்ப்பு  கண்டிப்பாக இருக்கும். இப்படி வளர்க்கும் கோழிகளை கிராமத்தினர் தேவையானவற்றை வீட்டிற்கு வைத்துகொண்டு சில கோழிகளை வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். கிராமங்களில் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை வியாபாரிகள் வந்து செல்வார்கள். அப்போது விற்பனை செய்ய வேண்டிய கோழிகளை விற்பனை செய்து அந்த பணத்தில் குடும்பத்திற்கு தேவையான செலவுகளை கவனித்து கொள்வார்கள்.

இப்படி வாங்கப்பட்ட கோழிகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கரூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைத்து வருகின்றனர். நன்கு வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகளை கால்களை கட்டி பெரிய சாக்கில் போட்டு கட்டி பேருந்து மூலமாக பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று லாபகரமான விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து நாட்டுகோழி வியாபாரிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நாட்டு கோழி வளர்ப்பு அதிகம். இதனால் இங்கு கோழிகள் அதிக அளவில் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி நாங்கள் குக்கிராமங்களுக்கு சென்று வீட்டில் உள்ள கோழிகளை ஒவ்வொன்றாக வாங்கி ஒருவாரகாலத்திற்குள் நூறுக்கணக்கான கோழிகளை வாங்கி அதற்கான தீவனங்களை வைத்துவிடுவோம்.

பின்னர் மொத்தமாக நான்கைந்து வியாபாரிகள் ஒன்று சேர்ந்து பேருந்து மூலமாகவோ அல்லது தனியாக வேன் எடுத்துக்கொண்டோ கரூர், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளில் நாட்டுகோழி வளர்ப்பு இருக்கும். அவர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி சென்று குறிப்பிட்ட தொகை லாபம் வைத்து விற்பனை செய்கிறோம். தற்போது நாட்டுக்கோழி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால் எங்களுக்கு நல்ல முறையில் லாபம் கிடைத்து வருகிறது. இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம் என்றனர்.

Tags : Villages ,Karur ,Tirupur ,Namakkal ,Tiruchirapalli Districts ,Salem ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்