சோளிங்கரில் பரபரப்பு: தாறுமாறாக கார் ஓட்டிய போதை ஆசாமி கைது: 10 பேர் படுகாயம்; 4 வாகனங்கள் சேதம் * குற்றவாளியை ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகை

சோளிங்கர், ஏப்.25: போதையில் தாறுமாறாக கார் ஓட்டி 10 பேரை காயப்படுத்தி, 4 வாகனங்களை சேதப்படுத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்(30). இவர் சோளிங்கரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை வந்தார். உறவினர் வீட்டில் இருந்த புதிய காரை ஓட்டி பார்க்க ஆசைப்பட்டாராம். இதையடுத்து, அவர் காரை எடுத்துக்கொண்டு திருத்தணி சாலை வழியாக காரை தாறுமாறாக ஓட்டி சென்று சாலையில் வந்துகொண்டிருந்தவர் மீதும், அங்கு சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதிவிட்டு சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் காரை சினிமா பாணியில் துரத்தினர். மேலும், தகவலறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் சாலையில் தடுப்பு வேலி அமைத்து காரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் தடுப்பு வேலியையும் இடித்து தள்ளிவிட்டு கார் சென்றது.

இதனால், போலீசாரும், இளைஞர்களும் விரட்டிச்சென்று பஜார் தெருவில் காரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து, காரையும் சவுந்திரபாண்டியனையும் சோளிங்கர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சோளிங்கர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சவுந்திரபாண்டியனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் அவர்களை சமரச பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்து சவுந்திரபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சவுந்திரபாண்டியன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர். இச்சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். மேலும், 4 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: