சோளிங்கர் அருகே பயங்கரம்: தந்தை குத்திக்கொலை மகன் அதிரடி கைது... போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி

சோளிங்கர், ஏப்.25: சோளிங்கர் அருகே தந்தையை, கத்தியால் குத்தி கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசாருக்கு தெரிவிக்காமல் சடலத்தை அடக்கம் செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள பள்ளமங்கலம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம்(85), விவசாயி. இவரது மனைவி ரத்தினம்(75). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2வது மகன் ஏழுமலைக்கும், அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தகராறில், கலைச்செல்வி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து, பஞ்சாட்சரம் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு போதையில் வந்த ஏழுமலை, ‘எனது மனைவியின் வீட்டிற்கு சென்று சமாதானம் செய்து அழைத்து வா' என கூறியுள்ளார். அதற்கு பஞ்சாட்சரம் மறுத்தாராம்.

இதனால், இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பஞ்சாட்சரத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பஞ்சாட்சரம் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த ஏழுமலை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பஞ்சாட்சரத்தின் உறவினர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல், சடலத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த ஏழுமலையை நேற்று காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து யாருக்கும் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: