ஜலகண்டாபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் சாலை மறியல்

ஜலகண்டாபுரம், ஏப்.25: ஜலகண்டாபுரம் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து, காலிகுடங்களுடன் மக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த சூரப்பள்ளி கிராமம், குப்பம்பட்டி காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், கூட்டு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஏற்றப்பட்டு சுழற்சி முறையில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், இருப்பாளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த காவிரிநீர் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் கூறினர்.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன் வீரக்கல்- நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பைப்லைன் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். குடிநீர் பற்றாக்குறையை தடுக்க பெரிய அளவிலான பைப்லைன் அமைத்துதர வேண்டும் என கூறி, பைப்லைன் அமைக்கும் பணியை மக்கள் பாதியில் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், நங்கவள்ளி பஸ் ஸ்டாப்பில் நேற்று மதியம் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் சமாதானம் செய்து, நங்கவள்ளி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய ஒன்றிய ஆணையாளர் சத்தியவிஜயன், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் ேபரில் கலைந்து சென்றனர்.

Related Stories: