ஓமலூர் பகுதியில் சீனி துளசி பயிரிட்டு லாபம் பார்க்கும் விவசாயிகள்

ஓமலூர், ஏப்.25: ஓமலூர் வட்டாரத்தில் கோடை விவசாயமாக, சீனி துளசியை விவசாயிகள் சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் ஆலோசனைகள் படி, சீனி துளசியை பயிரிட்டுள்ளனர். சீனி துளசி ஒரு மருத்துவப்பயிராகும். இது சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்தது. இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் ஸ்டீவியோ சைட், ரிபோடிசைட் எனும் பொருள் சர்க்கரைக்கு மாற்றாக, மிகக்குறைந்த அளவு சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட, இந்த துளசி நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ஒரு எக்டேரில் சராசரியாக 2,500 கிலோ முதல் 3,000 கிலோ காய்ந்த சீனி துளசி இலைகள் கிடைக்கும். காற்றோட்டம் உள்ள இடங்களை தேர்வு செய்து சீனி துளசியை பயிரிட வேண்டும். இதன் விதைகள் மலட்டுத்தன்மை கொண்டது. விதைகள் முளைப்பு திறன் மிகக் குறைவானதால், திசு வளர்ப்பு முறையில், வீரிய கன்றுகளாக மாற்றி பயிரிட்டு வருகிறார்கள். போதுமான வெளிச்சம் மற்றும் 38 டிகிரி மேல் இல்லாத இடம் சிறந்தது. காற்றின் ஈரப்பதம் 60 சதவீதத்திற்கு மேல் இருந்தால் செழித்து வளரும். இது குறைந்த செலவில் அதிக வருமானம் அளிக்கக்கூடிய மாற்றுப்பயிர் திட்டமாகும். அதனால், ஓமலூர் காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் சீனி துளசியை அதிகமாக பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும், இந்த துளசியை வியாபாரிகள் நேரடியாக தோட்டத்திற்கே வந்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories: