சான்றிதழ்கள் வழங்குவதில் இ-சேவை மைய ஊழியர்கள் அலட்சியம்

மேட்டூர், ஏப்.25: மேட்டூர் தாலுகா அலுவலக இ-சேவை மையத்தில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி நிறுவனத்தில், இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பிறப்பு, இறப்பு சான்று, பள்ளி மாணவ, மாணவியருக்கு இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சான்றிதழ் பெறுவதற்கு ₹60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்காக இருப்பிடச் சான்று, வருவாய் சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இம்மையத்தில் பிரிண்டர் பழுது என கூறி, கடந்த 10 நாட்களாக சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டு, தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற முடியாமல் போகிறது. மேலும் சான்றிதழ் கேட்டு வருபவர்களை, இ-சேவை மைய ஊழியர்கள் அலட்சியமாக நடத்துவதாக மாணவ, மாணவியரும், அவர்களது பெற்றோர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: