×

திருவண்ணாமலையில் இருந்து திருவள்ளூருக்கு உபரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு: வெளிமாநில தேர்தல்களில் பயன்படுத்தப்படும்

திருவண்ணாமலை, ஏப்.25: திருவண்ணாமலையில் உபரியாக இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வெளி மாநில தேர்தல்களில் பயன்படுத்த பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்து முடிந்தது. அடுத்த மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதையொட்டி, தேர்தலில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படாமல், உபரியாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மக்களவைக்கான அடுத்தடுத்த கட்டங்களில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள உபரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருவள்ளூரில் உள்ள மத்திய, மாநில நுகர்பொருள் வாணிபக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கிருந்து, வெளி மாநிலங்களுக்கு தேவைக்கு ஏற்ப அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், திருண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எண்ணும் இயந்திரங்கள், திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வளாகம் மற்றும் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்கு எண்ணும் இயந்திரங்கள், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் வைத்திருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நேற்று 4 லாரிகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, 1,481 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 666 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 492 ஒப்புகை ரசீது இயந்திரங்கள்(விவிபேட்) ஆகியவை, திருவண்ணாமலையில் இருந்து நேற்று அனுப்பப்பட்டது.

Tags : Tiruvannamalai ,Tiruvallur ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை