×

கலசபாக்கம், தண்டராம்பட்டு அருகே பரபரப்பு; குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல்.. அதிகாரிகள் சமரசம்

கலசபாக்கம், ஏப்.25: கலசபாக்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், தண்டராம்பட்டு ஜோதிநகரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள், பிடிஓவிடம் மனு அளித்தனர். கலசபாக்கம் அடுத்த கெங்கவரம், ஆதமங்கலம் வடக்கு காலனி, ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கெங்கவரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விசிகவினர் நேற்று, போளூர்- மேல்சோழங்குப்பம் சாைல, ஆதமங்கலம் மெயின்ரோட்டில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போளூர் டிஎஸ்பி பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் மலர்(கடலாடி), சீனிவாசன்(கலசபாக்கம்), தாசில்தார் லலிதா, பிடிஓ சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், ஒரு வாரத்திற்குள் குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் போளூர்- மேல்சோழங்குப்பம் சாைலயில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், தண்டராம்பட்டு ஊராட்சி, ஜோதி நகரை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 மாதமாக தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவி வருவதாகவும், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல தடவை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வட்டார வளர்ச்சி அலுவலத்தை முற்றுகையிட்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், நாளை(இன்று) சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்து பார்வையிட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Thantharampattu ,Thrissur ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...