×

திருமண மண்டப கான்கிரீட் தளம் சரிந்த விபத்தில் படுகாயம் அடைந்த மேஸ்திரி கண்பார்வை பறிபோனது: உரிமையாளர் மீது வழக்கு

வேட்டவலம், ஏப்.25: வேட்டவலம் அருகே திருமண மண்டப கட்டுமான பணியின்போது, கான்கிரீட் தளம் சரிந்த விபத்தில், படுகாயம் அடைந்த மேஸ்திரி கண்பார்வை பறிபோனது. இதுதொடர்பாக, மண்டப உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயசாரதி(37). இவர் வேட்டவலம் அடுத்த தளவாய்குளம் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டி வருகிறார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அந்த மண்டபத்தின் 2வது தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென கான்கிரீட் தளம் சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த மேஸ்திரி, சித்தாள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டது. இதில் செஞ்சி தாலுகா, மாதப்பூண்டி கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி ராஜேந்திரன்(41) என்பவருக்கு இடது கண்ணில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், முன்னேற்றம் இல்லாததால், மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராஜேந்திரனின் இடது கண் பார்வை பறிபோனதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது இடது கண்ணை டாக்டர்கள் அகற்றினர். இதுதொடர்ந்து, வேட்டவலம் காவல்நிலையத்தில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார், மண்டப உரிமையாளர் விஜயசாரதி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : collapse ,Owner ,floor collapse ,
× RELATED தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்த...