×

கிராமப்புறங்களில் கட்டி முடித்தும் பயன்பாட்டுக்கு வராத இ.சேவை மையங்கள் மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீண்

காரைக்குடி, ஏப்.25: கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக பல கோடி செலவில் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்ட கிராம சேவை மையங்கள் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது. 2015ம் ஆண்டு முதல் அனைத்து வகையான சான்றுகள் இ சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசுத்துறை சேவைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வருவாய் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றுகள், சமூக பாதுகாப்பு திட்ட விண்ணப்பங்கள், போட்டித்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், வாக்காளர், ஆதார் அடையாள அட்டை பெறுவது என பல சேவைகள் இ சேவை மையங்கள் மூலமே வழங்கப்படுகிறது. அரசுத் துறை பணிகள் அனைத்தும் ஆன்லைன் மயமாகி விட்டதால் இ சேவை மையங்களை மட்டுமே மக்கள் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது. சான்றுகள் பெற தாலுக்கா அலுவலகங்களில் காத்துகிடந்த நிலை மாறி இசேவை மைங்களில் பதிவு செய்து சான்று பெறும் வசதி வந்துள்ளது.

கிராமப்புற மக்கள் இச்சேவைக்கு என நகர் பகுதிகளுக்கு வந்து அலைவதை தவிர்க்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.17 லட்சம் செலவில் 3 அறைகளுடன் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சேவை மையங்கள் கட்டப்பட்டன. மகளிர் குழுவினருக்கு கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பயிற்சி அளிக்கப்பட்டு இம்மையங்கள் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் கட்டிடம் கட்டி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மக்கள் பயனுக்கு வராமல் பயனற்று கிடக்கிறது. மக்கள் வரிப்பணம் வீணாவதோடு, கிடைக்க வேண்டிய சேவையும் பாதிக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மக்கள் உரிமை சமூக நலஅமைப்பு நிர்வாகி வெங்கட் கூறுகையில், கிராமமக்களின் சிரமத்தை குறைக்க கட்டப்பட்ட இச்சேவை மைய கட்டிடங்கள் பூட்டி பயனற்று கிடக்கிறது. பயனற்று கிடப்பதால் பல்வேறு பகுதிகளில் குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் ஜன்னல், கதவுகளை கூட எடுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags : EPS Service Centers ,areas ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...