×

போராட்டத்தில் பங்கேற்றதால் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ‘கை’ வைத்த கருவூலத்துறை

சிவகங்கை, ஏப்.25: தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ, ஜியோ சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒரு வாரம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் சத்துணவு, வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத் துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு வேலை நிறுத்த காலமான ஒரு வாரத்திற்குறிய சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது வழக்கம். ஒவ்வொருவரின் அடிப்படை சதவீதத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கப்படும். இந்த ஆண்டும் ஊதிய உயர்வுடன் கூடிய இம்மாதத்திற்குறிய சம்பள பில் மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களில் வழங்கப்பட்டது.

ஆனால் வேலை நிறுத்த காலமான 7 நாட்களுக்குறிய பணத்தையும் பிடித்தம் செய்தே ஊதிய உயர்வை வழங்குவோம் என கருவூலத்துறை அலுவலர்கள் தெரிவித்ததால் ஆசிரியர்,அரசு ஊழியர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: வேலை நிறுத்தத்திற்கு தண்டனையாக வேலை நிறுத்த காலத்திற்குறிய ஊதியத்தை பிடித்தம் செய்து விட்டனர். தற்போது ஊதிய உயர்விலும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். கல்வித்துறை அலுவலகங்களில் ஊதிய பில் கையெழுத்தான பிறகு கருவூலத்துறை அலுவலர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டித்தக்கது. இந்த அரசு தொடர்ந்து ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஊதிய உயர்வை எப்போதும் உள்ளதுபோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : participants ,teachers ,strike ,wage hike ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...