×

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாற்பது நர்ஸ் பணியிடம் காலி நோயாளிகள் பாதிப்பு

சிவகங்கை, ஏப். 25: மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், 9 தாலுகா தலைமை மருத்துவமனையும், 47 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இங்கு கர்ப்பிணிகளுக்கான அனைத்து சிகிச்சைகள் மற்றும் பிரசவமும் பார்க்கப்படுகிறது. பகல் நேரத்தில் 8 மணிநேரம் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இருந்து சிகிச்சையளிக்கின்றனர். இரவு நேரங்களில் பிரசவம் பார்ப்பது, 24மணிநேரமும் ஊசி போடுவது, பரிசோதனைகள் செய்வது, மருந்து, மாத்திரைகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செவிலியர்களே செய்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் செவிலியர்கள், அவர்கள் பணிசெய்யும் எல்கைக்குள் உள்ள ஒவ்வொரு பள்ளிகளில் வாரந்தோறும் மாணவர்களுக்கு பரிசோதனைகள் செய்வது, கர்ப்பிணிகள் கணக்கெடுப்பு, குழந்தை பிறப்பு, தடுப்பூசி கணக்கெடுப்பு என பல்வேறு முகாம்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அந்த நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவர்கள் ஊசி போடுவதற்குகூட வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பகல் நேரத்தில் மட்டுமே டாக்டர்கள் இருப்பதால் இரவு நேரத்தில் பிரசவம் பார்ப்பது, குழந்தை பிறந்தவுடன் தாய், குழந்தைக்கு செய்ய வேண்டிய சிகிச்சை உள்ளிட்டவைகளை செவிலியர்களே செய்கின்றனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் பகல் அல்லது இரவு நேரங்களில் சிப்ட் முடித்து செல்லும் செவிலியர்களுக்கு பதில் மாற்றுவதற்கு ஆள் இல்லை. இதனால் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல மணிநேரம் செவிலியர்களே இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி ஓய்வு, இடமாறுதலில் சென்றவர்களுக்கு பதில் புதிய செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. 24 மணிநேரமும் டாக்டர்களும் இல்லாமல், செவிலியர்களும் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை பெற வருபவர்கள் கடும் அவதியடைகின்றனர். கிராமங்களில் உள்ளவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களையே நம்பியுள்ளனர். எனவே செவிலியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்றனர்.

Tags : nurse ,health centers ,
× RELATED தமிழகம் முழுவதும் வரும் 3ம் தேதி...