இடைத்தேர்தல் நடக்கும் திருப்பரங்குன்றத்தில் 4 மாதத்தில் 17,239 வாக்குகள் அதிகரிப்பு

மதுரை, ஏப். 25: இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் 4 மாதத்திற்குள் 17,239 வாக்குகள் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இத்தொகுதியில் வெளி தொகுதி ஆட்கள் திணிக்கப்பட்டார்களா என்று தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடக்க உள்ளது.  இதில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டி, அமமுக வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவதால் மும்முனை போட்டி உருவாகி உள்ளது. கடந்த ஜன.31ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியலில் இந்த தொகுதியின் வாக்காளர் விவரம் வருமாறு: மொத்த வாக்காளர்கள்: 3,01,557, ஆண்-   1,49,421, பெண்- 1,52,111, திருநங்கை- 25.  இந்த தொகுதியில் மதுரை மாநகராட்சி சார்ந்த 11 வார்டுகளும், 39 ஊராட்சி சார்ந்த கிராமங்களும் இடம்பெற்றுள்ளன. தொகுதியில்  வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி எகிறி உள்ளது. இதில் தில்லுமுல்லு நடத்திருக்குமோ என்று எதிர்கட்சியினர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த தொகுதி 2016ம் ஆண்டு பொதுத்தேர்தல் முதல், வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்த தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 96 ஆகும். இத்தொகுதியி ெவற்றி பெற்ற சீனிவேல் மறைந்ததால், 6 மாதத்தில் அதாவது 2016ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. அடுத்து 2 ஆண்டுக்கு பிறகு வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.  2018ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 318 ஆக குறைந்தது. அதாவது 1662 வாக்காளர் போலி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தனர். இந்த வாக்காளர் பட்டியலின்படி 2018ம் ஆண்டு நவம்பரில் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் நடைபெறாமல் தள்ளிபோனது. இதன் பிறகு கடந்த ஜன.1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளராக சேர மற்றும் விடுபட்டவர்கள் சேர்த்தல், முகவரி மாற்றங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி  மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 67,000 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இதில் அதிகபட்சமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 19 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.

இதன்படி புது வாக்காளர் சேர்க்கப்பட்டு வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 49 ஆயிரத்து 705 பேர் அதிகரித்தனர். இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 17 ஆயிரத்து 239 பேர் அதிகரித்துள்ளது தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் மாவட்டத்திலுள்ள மற்ற 9 தொகுதிகளிலும் தலா சில ஆயிரங்களுடன் மொத்தம் 32 ஆயிரத்து 466 பேர் தான் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எதிர்கட்சியினர் கூறுகையில், `` திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆளுங்கட்சியினர் தோல்வி பயத்தில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஓட்டுக்காக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டனர். வாக்காளர் பட்டியலில் இந்த தொகுதியில் மட்டும் அபரிமிதமான எண்ணிக்கை அதிகரித்து இருப்பது மர்மமாக உள்ளது. வேறு தொகுதியிலுள்ள வாக்காளர்கள் அதிகாரிகள் துணையோடு இங்கு முறைகேடாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை தேர்தல் ஆணையம் கண்காணித்து போலி வாக்காளரை நீக்கி  தில்லுமுல்லு நடைபெறாமல் தடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories: