கள்ளிக்குடி ஒன்றியத்தில் சுகாதார நிலையம் கட்டும் பணி தீவிரம்

திருமங்கலம், ஏப்.25: கள்ளிக்குடி ஒன்றியத்தில் செங்கபடை உள்ளிட்ட நான்கு கிராமங்களில் பழுதடைந்து இருந்த சுகாதார நிலையங்கள் இடிக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்டு வருகின்றன. கள்ளிக்குடி ஒன்றியத்தில் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 15 துணை சுகாதாரநிலையங்கள் அமைந்துள்ளன. இதில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான செங்கபடை, திருமால், வீரப்பெருமாள்புரம், கே.வெள்ளாகுளம் கிராமங்களில் அமைந்திருந்த துணை சுகாதார நிலையங்கள் மிகவும் மோசமாக இடியும் நிலையில் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த நான்கு கிராமங்களிலும் துணை சுகாதார நிலையங்கள் இடித்து அகற்றப்பட்டன. தொடர்ந்து தலா 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக துணை சுகாதார நிலையங்கள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ``இதில் தரைத்தளத்தில் மருத்துவமனையும், மேல்தளத்தில் நர்சுகளின் குடியிருப்புகளும் அமைகின்றன. இதே போல் மீதமுள்ள துணை சுகாதார நிலையங்களும் முழுமையாக சீரமைக்கப்பட்டு வருகின்றனர்’’ என்றனர்.

Related Stories: