மாநகராட்சியின் அண்ணா மாளிகை வளாகப்பகுதி பறக்கும் பாலத்திற்கு தாரைவார்ப்பு

மதுரை, ஏப். 25: மதுரை மாநகராட்சியின் அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தின் முன்பகுதி பறக்கும் பாலத்திற்கு தாரைவார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை- நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை ஏற்று ரூ. 1,028 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்கிறது. இதில் சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. தூரத்திற்கு ரூ. 612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது. ரூ. 416 கோடியில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தூரம் நான்குவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. சொக்கிகுளம் பிடிஆர் சிலையில் நேராக இருந்து தெற்கு நோக்கியும், அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி ஈகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் பறக்கும் பாலத்திற்கு ஏறி, இறங்கும் வகையிலும் பாதை அமைக்கப்படுகிறது.

இந்த பாதை அமைப்பதற்கு மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ள முன்பகுதி பறக்கும் பாலம் கட்டுமான நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. இந்த பறக்கும் பாலம் சரியாக மாநகராட்சி மாமன்றக்கூடத்தை இணைக்கும் உயர்மட்டப்பாலம் அருகே முடிவடைகிறது. இந்த இடத்தை பறக்கும் பாலத்திற்காக மாநகராட்சி தாரைவார்த்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக மாநகராட்சி வளாகத்திற்குள் இருந்த மரங்கள் அடியோடு வெட்டி அகற்றப்பட்டுள்ளன. தற்போது உள்பக்கமாக தள்ளி மாநகராட்சி வளாகத்திற்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழுமையாக சுவர் கட்டி முடிந்ததும், ஏற்கனவே கட்டியிருக்கும் சுற்றுச்சுவர் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டு, பறக்கும் பாலத்திற்கான வழியாக மாற்றப்பட்டு விடும் என பறக்கும் பாலம் கட்டுமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: