சாப்டூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்

பேரையூர், ஏப். 25:சாப்டூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் ெசய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சாப்டூர் அருகேயுள்ள பெரிய வண்டாரி. இந்த கிராமத்தில் மேற்குதெரு மற்றும் வடக்குத்தெருவில் வசிக்கும் பகுதிகளுக்கு குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஊரில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 3 ஆழ்துளை கிணற்றில் ஒன்று அருகிலுள்ள காலனிப்பகுதிக்கும், மற்றொன்று ஊரிலுள்ள இரண்டு மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டிக்கும் பயபடுத்துகின்றனர். அதனால் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. மூன்றாவதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இருந்தும், மின்மோட்டார் பயன்படுத்தாமல் பயனற்று கிடக்கிறது.

இதனைக் கண்டித்தும், குடிநீர் வழங்ககோரியும், பெரியவண்டாரி - மெய்யனூத்தம்பட்டி சாலையில்பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், சாப்டூர் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்னைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனுமதியின்றி மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: