2 ஆண்டுகளாக பணி நடந்தும் ‘மக்கர்’ செய்யும் ஜிக்கா திட்டம்கொடுத்த இணைப்புகளுக்கே குடிநீர் வரவில்லை என்னதான் செய்கிறது மாநகராட்சி?

திண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல் மாநகராட்சியில் ஜிக்கா குடிநீர் திட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் பல இடங்களில் தண்ணீர் வராமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

திண்டுக்கல் மக்களுக்கு தடையின்றி தினமும் குடிநீர் வழங்க ஜிக்கா (ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணையம்) திட்டம் அமைக்கப்பட்டது. இதற்காக நகரில் உள் மற்றும் வெளிப்பகுதியில் 227 கிமீ.க்கு குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடந்த நிலையில் தற்போது வரை 95 சதவீதம் பணிகள் முடிவுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தில் ஆத்தூர் மற்றும் காவிரியில் இருந்து தினமும் 1.50 கோடி லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பழைய குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு 27 ஆயிரத்து 500 வீடுகளுக்கு மீட்டருடன் பொருத்திய புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 கோடி கூடுதல் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஜிக்கா திட்டத்தில் இணைப்பு பெறப்பட்ட பல வீடுகளுக்கு தண்ணீர் வராமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
Advertising
Advertising

குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் நிலவிய திருமலைசாமிபுரம், போடிநாயக்கன்ப்பட்டி உட்பட பல இடங்களில் தேர்தலை புறக்கணிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இவர்களை அதிகாரிகள் அந்த நேரத்தில் சமாளித்தாலும் பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இதனால் பல இடங்களில் தண்ணீர் வராமல் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்பி தவிக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாலச்சந்திரன் கூறியதாவது, ‘இதுவரை இணைப்பு பெறாதவர்கள் டெபாசிட் தொகை செலுத்தி குடிநீர் இணைப்பு பெறலாம். தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளது. பொதுமக்கள் குடிநீரை குடிக்க மட்டும் பயன்படுத்த வேண்டும். பிற தேவைகளுக்கு போர்வல், தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.  ஜிக்கா திட்ட குழாய் விரைவில் சரி செய்யப்பட்டு தண்ணீர் முறையாகவும், சீராகவும் வழங்கப்படும்’ என்றார்.

Related Stories: