கொடைக்கானலில் சீலை அகற்றி நடத்தி வந்த மேலும் 2 தங்கும் விடுதிகள் கண்டுபிடிப்பு மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்

கொடைக்கானல், ஏப். 25: கொடைக்கானலில் மேலும் 2 தங்கும் விடுதிகள் சீலை அகற்றி நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் இவற்றை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி கொடைக்கானல் பகுதியில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்ட சுமார் 286 தங்கும் விடுதிகள், ஓட்டல்களை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதில் ஒரு சில தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக திறக்கப்பட்டு இயக்கப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ததில் கொடைக்கானல் காமராஜர் சாலையில் பூட்டி சீல் வைத்த ஒரு தங்கும் விடுதியை அதன் உரிமையாளர் திறந்து நடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து ஏப்.22ம் தேதி நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று மீண்டும் விடுதியை பூட்டி சீல் வைத்தனர். மேலும் இதற்கு மின்இணைப்பு பெறப்பட்ட கடையின் மின் மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். தொடர்ந்து இதுபோல் சீல் வைத்த விடுதிகள் திறக்கப்பட்டுளதா என ஆய்வு செய்து வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் நேற்று கொடைக்கானல் லாஸ்காட் சாலையில் உள்ள தங்கும் விடுதி சீலை அகற்றி வாடகைக்கு விட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து டிபிஓ முருகானந்தம், பெரியசாமி, நகரமைப்பு அலுவலர் ரவி உள்ளிட்டோர் அந்த விடுதியை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் கொடைக்கானல் மாப்பிள்ளை முதலியார் தெருவில் சீலை அகற்றி நடத்திய தங்கும் விடுதியை நகராட்சி அதிகாரிகள் மீண்டும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு கொடுக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ‘சீலை அகற்றி தங்கும் விடுதிகளை திறந்தது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவுள்ளோம். மேலும் இதுகுறித்து நீதிமன்றத்திலும் அறிக்கை தாக்கல் செய்து விடுதிகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல்  யாரேனும் சட்டவிரோதமாக பூட்டிய சீலை அகற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: