ஒட்டன்சத்திரம், ஏப். 25: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பூசணி காய் விலை உயர்ந்து விற்பனையாகிறது. ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூசணி விவசாயம் அதிகளவில் நடக்கிறது. தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் பூசணி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் பூசணி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணி ரூ.5க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ பூசணி ரூ.16 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பூசணி விவசாயிகள் கூறுகையில், ‘கடும் வறட்சியால் பூசணி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. வைகாசியில் முகூர்த்தங்கள் அதிகம் இருப்பதால் பூசணி தேவை அதிகரிக்கும். அப்போது விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.