வரத்து அதிகரிப்பால் புளி விலை பாதியாக குறைந்தது

திண்டுக்கல், ஏப். 25: திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் புளி விலை குறைய துவங்கியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல்  மாவட்டத்தில் நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் ,வத்தலக்குண்டு  பகுதியில் புளிய மரங்கள் அதிகளவு உள்ளன. தற்போது புளி சீசன் காலம் என்பதால்  திண்டுக்கல் நாகல்நகரில் திங்கள்கிழமை தோறும் புளி சந்தை நடக்கும்.  குறிப்பாக நத்தத்தில் இருந்து அதிகளவு புளிகள் வெளிமாவட்டங்களுக்கும்,  மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டை விட  இந்தாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. காரணம் புளி பூக்கும் நேரத்தில்  காற்று அதிகமாக வீசாததால், பூக்கள் உதிர்வது தவிர்க்கப்பட்டதுதான்.  கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொட்டை எடுக்காத புளி (10 கிலோ) ரூ.500 முதல்  ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

கொட்டை எடுத்த புளி (10 கிலோ)  ரூ.1,300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரிப்பால் கொட்டை எடுக்காத புளி கிலோ ரூ.290க்கும்,  கொட்டை எடுத்த புளி கிலோ ரூ.1100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதனால் புளி ரசம், புளி குழம்பு வைக்கும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். இதுகுறித்து புளி வியாபாரி ஒருவர் கூறியதாவது,  ‘கடந்தாண்டை விட புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. நத்தம் புளிக்கு இந்தியா  முழுவதும் மவுசு அதிகம். புளி விளைச்சல் அதிகரிப்பால் இன்னும் விலை  குறைவதற்கு வாய்ப்புள்ளது’ என்றார்.

Related Stories: