இல்லத்தரசிகள் மகிழ்ச்சி டிக்-டாக் தடை நிபந்தனையுடன் நீக்கம்

மதுரை, ஏப். 25: மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் டிக்-டாக் செயலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனை பலரும் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த பிப்ரவரியில் டிக்-டாக் செயலியை தடை செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தோனேசியாவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்களின் நலன் கருதி டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. மேலும் டிக்-டாக் வீடியோக்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் கிளையின் தடையை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஐகோர்ட் கிளை ஏப். 24க்குள் (நேற்று) முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக் டாக் செயலி நிறுவனம் தரப்பில், ‘‘ஐகோர்ட் கிளை தடைக்கு பின், ஆறு மில்லியன் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன. தவறான நோக்கம் மற்றும் ஆபாசமான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டால், அடுத்த 15 நிமிடங்களில் அகற்றப்படுகிறது. இந்திய அரசின் கருத்துரிமை சட்ட விதிகளுக்கு உட்பட்டே டிக்-டாக் இயங்குகிறது. தடையால், சுமார் 250 பணியாளர்கள் நேரடியாகவும், 5 ஆயிரம் மறைமுக பணியாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என வாதிடப்பட்டது. அப்ேபாது நீதிபதிகள், ‘‘இந்தியாவில் சிறுவர், சிறுமியரை பாதுகாக்க சரியான சட்டங்கள் இல்லை’’ என்றனர். மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், ‘‘குழந்தைகளின் தனி உரிமை பாதுகாப்பு தொடர்பாக கடந்த 2017ல் அமைக்கப்பட்ட நீதிபதி தலைமையிலான குழுவின் சட்ட முன் வரைவு தயாராக உள்ளது. இந்த சட்ட முன்வரைவு வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதலுக்கு வைக்கப்படும்’’ என கூறப்பட்டிருந்தது.

டிக்- டாக் தரப்பில், ‘‘பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை விட டிக்-டாக் செயலியில் அதிக பாதுகாப்பு வசதிகள் உள்ளன. தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்தால் தானாகவே நீக்கம் செய்யும் வசதி உள்ளது. இந்தியாவிலிருந்து இந்த செயலி குறித்து இதுவரை எவ்வித புகாரும் இல்லை. தற்போது புகார் தெரிவிக்க இந்தியாவிற்கு என தனி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்கவேண்டும்’’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். ஆனால் சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களின் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும்’’ என்றனர். இதற்கு டிக்-டாக் நிறுவனத்தின் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.‘‘பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டால், அவற்றை செயலியிலேயே அகற்றும் வகையில் உள்ளது.

அப்படியே தவறினாலும் மனிதர்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் 13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மைனர். இந்தியாவில் 18 வயதிற்கு கீழுள்ளவர்களே மைனர் பிரிவில் சேர்க்கப்படுவர். டிக்-டாக் செயலி தொடர்பாக இந்தியாவில் இருந்து வரும் புகார்களை விசாரிக்க தனியாக நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்’’ எனவும் டிக்-டாக் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி அனுமதித்தனர். அதே நேரம் நிறுவனத்தின் உறுதிமொழியை மீறினால், ஐகோர்ட்டே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் ெசய்யும். அதை டிக்-டாக் நிறுவனம் சந்திக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories: