×

கசிவு நீரை பிடித்து காலத்தை ஓட்டும் மக்கள் பாளையன்கோட்டையின் அவலமிது

செம்பட்டி, ஏப். 25: பாளையன்கோட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் குழாய்களில் வரும் கசிவு நீரை பிடித்து பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், பாளையன்கோட்டை ஊராட்சியில் கூலம்பட்டி, பிரவான்பட்டி, இந்திராகாலனி, காமன்பட்டி, தேவனூர், லட்சுமிபுரம், பாளையன்கோட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்திரகாலனி பகுதி மக்கள் குடிநீரின்றி கடும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகம் முறையாக விநியோகம் செய்யாததால் இப்பகுதி மக்கள் குழாயிலிருந்து வெளியேறி வரும் கசிவுநீரை பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். மேலும் டிராக்டரில் வரும் ஒரு குடம் தண்ணீர் ரூ.5க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அதை கண்டுகொள்ளவில்லை. விரைவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட வேண்டியதிருக்கும்’ என்றனர்.

Tags : leak ,Palayankottai ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!