×

ஆலங்குளம், சுரண்டை, புளியங்குடி பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: 15 ஆயிரம் வாழைகள் நாசம்

ஆலங்குளம், ஏப். 24: ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை 4.45 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது இடிமின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. மழை பெய்த போதே சூறைக்காற்றும் வீசியதால் ஆலங்குளம் ஜோதிநகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. மாலை 4.45 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.  ஆலங்குளம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், அருண் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்களை சீரமைத்து தற்காலிகமாக மின்இணைப்புகளை வழங்கினர். இருப்பினும் ஜோதிநகர், அண்ணாநகர் பகுதியில் மின்கம்பங்கள் விழுந்ததால் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.   சுரண்டை: சுரண்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு திடீரென சூறை காற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 11 மணி வரை நீடித்தது. கோடை மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.  சூறை காற்றுடன் பெய்த மழையால் சுந்தரபாண்டியாபுரம் பகுதியில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறும்போது ‘வாழை குலைதள்ளி ஒரு வாரத்தில் பழுக்கும் நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்றால் எனது தோட்டத்தில் மட்டும் 800 வாழைகள் சாய்ந்து விட்டன. இந்த பகுதியில் மட்டும் 5ஆயிரம் வாழைகளுக்கு மேல் சாய்ந்து விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்றார்.   புளியங்குடி: புளியங்குடி, வாசுதேவநல்லூர் தென்மலை, கூடலூர், துரைச்சாமிபுரம் பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை சூறைக்காற்றுடன்  பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 10,000 வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் சாய்ந்து விழுந்தன. ஒரு வாழைத்தார் சுமார் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் முழுவதும் சாய்ந்து விழுந்தால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இதன் சேத மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும்.  
 இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் தோட்டக்கலைத்துறை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வைகுண்டசாமி, அன்பரசன்மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முனியசாமி, அன்புச்செல்வி, ராணி மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்த வாழை விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : areas ,Surandhi ,Puliyankudi ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...