நெல்லையப்பர் கோயிலில் வசந்த உற்சவ விழா

நெல்லை, ஏப்24: நெல்லையப்பர் கோயிலில் கோடைகால வசந்த உற்சவ விழாவையொட்டி சுவாமி, அம்பாளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை வசந்த மண்டபத்தில் நடந்தது.கோடையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பக்தர்களை காக்க கோயில்களில் வசந்த உற்சவம் நடத்தப்படுவதாக ஐதீகம் உள்ளது. வசந்த உற்சவ விழாவையொட்டி சித்ரா பவுர்ணமி தீர்த்தவாரி கைலாசபுரம் தைப்பூச மண்டபம் தாமிரபரணி நதிக்கரையில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் தீர்த்த வாரி மற்றும் அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் வசந்த மண்டபத்துக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளும் வைபவம் நடந்தது. இதற்காக வசந்த மண்டபத்தை சுற்றிலும் தண்ணீர் நிரப்பி அதன் நடுவில் உள்ள மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவருக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. வசந்த உற்சவ விழாவின் 4ம் நாளான நேற்று காலையில் வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வசந்த மண்டபத்தை சுவாமி, அம்பாள் வலம் வரும் வைபவம் நடந்தது. வசந்த உற்சவ விழாவையொட்டி 11 நாட்களும் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.

Related Stories: