×

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நெல்லையில் வியாபாரிகளுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்

நெல்லை, ஏப்.24: நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டன.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசுபடுதல், நிலத்தடி நீர் தடை ஏற்படுத்ததுல் மற்றும் கால்நடைகளுக்கு பேராபத்தை விளைவிப்பதால் தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள், டீ கப், தண்ணீர் டம்ளர், பிளாஸ்டிக் தட்டுகள் போன்றவை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து ஓட்டல்கள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்றாக வாழை இலை மற்றும் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் வீடுகளிலும் புதன் கிழமை தோறும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் பிரித்து வாங்கி சென்று ராமையன்பட்டி குடோனிற்கு கொண்டு செல்லப்பட்டு துகள்களாக மாற்றப்பட்டு சாலைகள் அமைக்க பயன்படுத்தப்படுகிறது.
 
நெல்லை மாநகர பகுதியில் கேரி பேக்குகள், தட்டுகள், தண்ணீர் டம்ளர்கள், பாக்கெட்கள், டீ கப்புகள், உணவகங்களில் பார்சல் செய்ய பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமிக்கு புகார்கள் வந்தது.கமிஷனர் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன் தலைமையில் வண்ணார்பேட்டை முருகன், சுகாதார கண்காணிப்பாளர்கள் இசக்கி, கருப்பசாமி மற்றும் குழுவினர் நெல்லை சந்திப்பு ரயில்வே பீடர் ரோடு, சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதியில் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டீ கப், பிளாஸ்டிக் தட்டு தண்ணீர் டம்பளர் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உணவகங்களில் பார்சல் செய்யவும் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...