×

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து ஆலந்தலையில் மீனவர்கள் உண்ணாவிரதம்

தூத்துக்குடி, ஏப். 24: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டன. ஆலந்தலையில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தின  கொண்டாட்டத்தின் போது இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்களில்  சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கேற்ற பெருந்திரளான கிறிஸ்தவர்கள்  மீதும், தேவாலயங்கள் மீதும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தது. இதில்  300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து ஆலந்தலை  உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவ  மக்கள் கடலுக்கு செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.  சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும்,  இதில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தூத்துக்குடியில்  நாட்டுப்படகுகள் நேற்று  மீன்பிடிக்க செல்லவில்லை. வேம்பார் முதல் பெரியதாழை வரை ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகள்  மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் கரைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. தூத்துக்குடியில் திரேஸ்புரம் கடற்கரையில் ஏராளமான நாட்டுப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.  இன்று வழக்கம் போல படகுகள் மீன் பிடிக்க செல்லும் என தெரிகிறது.

  திருச்செந்தூர்:   திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை மீனவ கிராமத்திலும்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. 200க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆலந்தலை மீனவர்கள் கறுப்பு ரிப்பன் அணிந்தபடி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இங்குள்ள அந்தோணியார் கோயில் அருகே நடந்த இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்கள், பெண்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.மாலை உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்ததும் ஆலந்தலை துணை பங்குதந்தை ஜாண்சன் தலைமையில் அற்புத கெபியில் சிறப்பு திருப்பலி நட ந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி ஊர்வலம் ஊரை சுற்றி வலம் வந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.  இதே போல்  இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து திருச்செந்தூரில் மீனவ மக்கள் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.  தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்செந்தூர் தேரடி திடலில் துவங்கிய மவுன ஊர்வலத்திற்கு ஊர்த்தலைவர்கள் அமலிநகர் செல்வராஜ், ஆலந்தலை தொம்மை, மணப்பாடு சேகர் தலைமை வகித்தனர். இதில் அமலிநகர், ஆலந்தலை, பழையகாயல், மணப்பாடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் திரளாகப் பங்கேற்றனர். அமலிநகரில் நிறைவடைந்ததும் பங்குத்தந்தை ரவீந்திரன் நன்றி கூறினார்.

Tags : Fishermen ,Alandham ,Sri Lankan ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...