×

கோவில்பட்டி அருகே தாழ்வான ஓடை தடுப்பு சுவரால் தொடரும் விபத்துகள்

கோவில்பட்டி, ஏப். 24: கோவில்பட்டி  அருகே தேசிய நெடுஞ்சாலை ஓடை தடுப்பு சுவரானது மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதால் விபத்துகள் தொடர்கின்றன. எனவே, தடுப்பு  சுவரை உயர்த்த வேண்டும் என பொதுமக்கள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  கோவில்பட்டி அருகே மதுரையில் இருந்து நெல்லை செல்லும் தேசிய  நெடுஞ்சாலையோரம் தனியார் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும்  கலை கல்லூரி அமைந்துள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலை வழியாக  மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி மார்க்கமாகவும், சங்கரன்கோவில் கழுகுமலை, புளியங்குடி, கடையநல்லூர் மார்க்கமாகவும்  அதிகளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், வேன்கள், கன்டெய்னர் லாரிகள்,  கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் கடந்து செல்கின்றன.  இந்த தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பொறியியல் கல்லூரி இருந்து  தனியார் கலை கல்லூரி முன்புறம் வழியாக சர்வீஸ் ரோடு செல்கிறது. இந்த  கல்லூரிகள் முன்புறம் 10 அடி ஆழம் கொண்ட ஓடை செல்கிறது. இதனால்  நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டபோது,

இந்த ஓடையின் தென்பகுதிகளில்  அதாவது சர்வீஸ் ரோட்டோரம் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஆனால், இது குறைந்த  உயரத்திலேயே கட்டப்பட்டுள்ளதால் விபத்துகள் தொடர்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில்  அதிவேகமாக வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக செல்லும்போது நிலைதடுமாறி  ஓடையோரம் உள்ள தடுப்புசுவரில் மோதி விபத்திற்கு உள்ளாகின்றன.  இவ்வாறு  விபத்து நேரிடும்போது தடுப்பு சுவரின் உயரம் குறைவாக இருப்பதால், மோதிய  வேகத்தில் வாகனங்கள் தடுப்புசுவரை உடைத்து கொண்டு ஓடைக்குள் தலைகுப்புற  கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  இருசக்கர வாகனத்தில் சென்ற சிலரும் தடுப்பு சுவரில் மோதி ஓடைக்குள்  கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்தனர். எனவே கோவில்பட்டி அருகே  தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ்ரோட்டோரம் உள்ள ஓடை பகுதியில் தடுப்புசுவரை  உயர்த்தி கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,Kovilpatti ,
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்