×

உடன்குடி அருகே பிள்ளைவிளையில் மணல் லாரிகளால் விபத்து அபாயம்

உடன்குடி,  ஏப். 24:     உடன்குடி பிள்ளைவிளை பகுதிகளில் மணல் லாரிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனிடையே நேற்று ஊருக்குள் வந்த லாரியின் கதவுகள் திடீரென திறந்துகொண்டதால் சாலையில் மணல் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக வாகனங்கள் ஏதும் அந்த  சமயத்தில் வராததால் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.  உடன்குடி  கல்லாமொழி பகுதியில் அனல்மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. நீர்பிடிப்பு பகுதியான இந்த பகுதியை கடல் மட்டத்தை விட உயரமாக்க  பல ஏக்கர் பரப்பளவில் மணல்களை கொண்டு சீர்செய்து உயரப்படுத்தி வருகின்றனர்.  இந்த பணிக்கென தேவையான மணல்களை நாசரேத், மெஞ்ஞானபுரம், பன்னம்பாறை,  உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த  குளங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் எவ்வித  பாதுகாப்புமின்றி கொண்டு செல்கின்றனர். மேலும் மணல் கொண்டு செல்லும்  லாரிக்கு வாடகை டன் அளவுக்கு குறிப்பிட்ட தொகை என்றிருப்பதாலும்,  டிரைவருக்கு எத்தனை லோடு கொண்டு சென்றிருக்கிறார்களோ அதற்கு தகுந்தாற்போல்  தான் சம்பளம் என்றிருப்பதால் போட்டி போட்டுக் கொண்டு செல்கின்றனர். எவ்வித  பாதுகாப்புமின்றியும், அனுபவமில்லா டிரைவர்கள், மோசமான நிலையில் உள்ள  லாரிகள் என எந்த சாலை, வாகன விதிகளை முறையாக மதிப்பதில்லை.

 இந்நிலையில்  நேற்று காலை நாசரேத் பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று  மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள பிள்ளைவிளை பகுதியில் வரும் போது திடீரென சாலையின்  நடுவே லாரியின் பின்புற கதவு திறந்து மணல் மலைபோல் குவிந்தது. வழக்கமாக  எப்போதும் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருக்கும்  சாலையில் அந்த சமயத்தில்  எந்த வாகனங்களும் வராததால் அதிர்ஷ்டவசமாக விபத்து நிகழவில்லை இதனால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து மணல்களை ஏற்றிச் செல்லும்  லாரிகள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் தலையீட்டு பாதுகாப்பான முறையில் லாரிகளை  இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Tags : Udangudi ,
× RELATED உடன்குடியில் பைக் திருடிய வாலிபர் கைது