திருச்சி ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை தேவாலயம், மசூதி, கோயில்களில் பலத்த பாதுகாப்பு

திருச்சி, ஏப்.24: இலங்கையில் அடுத்தடுத்து  நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகத்தில் ஏர்போர்ட், ரயில் நிலையம், தேவாலயங்கள், மசூதி, கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ரயில்வே பாதுகாப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்ஐ ராஜ்குமார், மோப்ப நாய் பிரிவு சார்பில் டான் மோப்ப நாய் உதவியுடன் குழுவாக ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். லக்கேஜ்களை ஸ்கேனர் வழியாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். அதே போல் கார் பார்க்கிங் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். பின்னர் பார்சல் பிரிவிலும் சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில் நேற்று ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதே போல் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு போடப்பட்டு  மோப்பநாய் மூலம் சோதனையிடப்பட்டு வருகிறது. முக்கிய கோயில்கள்  உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

 திருச்சி விமான நிலையத்தில் மத்திய  தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் மோப்பநாய்,  மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்பட்ட பின்னரே  அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ரங்கம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கோயில்களில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்திய பின்னர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று இரண்டாவது நாளாக பலத்த சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: