×

முசிறி அருகே அய்யம்பாளையத்தில் வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

தா.பேட்டை, ஏப்.24:  முசிறி அருகே அய்யம்பாளையத்தில் வருவாய்த்துறையினரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி அடுத்துள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயபால், கூலித்தொழிலாளி.  இவரது மகன் தீனா(21). இவர் நேற்று முன்தினம் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள  தென்னந்தோப்பில் நண்பர்களுடன் விளையாடி உள்ளார். அப்போது வீசிய சூறாவளி  காற்றில் உடைந்து விழுந்த தென்னை மரம் தீனாவின் மீது விழுந்துள்ளது. இதில்  வாலிபர் தீனாவிற்கு கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் தீனாவின் இடது கால் நசுங்கியது. இதையடுத்து  அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீனா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்சி  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மரம் விழுந்ததில்  ஏற்பட்ட பாதிப்பினால் வாலிபரின் கனுக்கால் வரை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி  அகற்றப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளர், முசிறி ஆர்டிஓ, தாசில்தாருக்கு முறையாக அறிக்கை தரவில்லை. சூறாவளி  காற்றினால் வாலிபர் பாதிக்கப்பட்டது குறித்து வருவாய்த்துறையினர்  கண்டுகொள்ளவில்லை எனக்கூறி அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும்  சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் திருச்சி-நாமக்கல் சாலையில்  அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.   இதனால்  இருபுறமும் பேருந்துகள் நின்று போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த முசிறி தாசில்தார் சுப்பிரமணியன்,  சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பா, செல்வராஜ் ஆகியோர் முசிறி ஆர்டிஓ  அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனக் கூறியதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.  சூறாவளி காற்றினால்  ஏற்பட்ட விபத்தினால் காலை பறிகொடுத்த வாலிபருக்கு அரசு நஷ்டஈடு  வழங்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : revenue officials ,Sudden Road Strike ,Musiri ,Ayyambalayam ,
× RELATED முசிறியில் பாரிவேந்தர் வாகனத்தை...