×

சர்வீஸ் சாலை அமைப்பதற்காக பால்பண்ணை-துவாக்குடி வரை கடைகளின் ஆக்கிரமிப்பு அகற்றம் நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி

ஏர்போர்ட், ஏப்.24:  சர்வீஸ் சாலை அமைப்பதற்காக திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலும் 500க்கும் மேற்பட்ட கடைகளில் ஆக்கிரமிப்புகள் நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
 திருச்சி பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரையிலான சர்வீஸ் சாலையை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தபட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், பல்வேறு தரப்பட்ட அரசியல்வாதிகளிடமும் ஏற்கனவே முறையிட்டிருந்தனர். இதற்காக பல முறை உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதமே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இது தொடர்பாக மீண்டும் 10 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் பழைய பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரையிலான கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 அதில் முதல்கட்டமாக பால் பண்ணையில் இருந்து அரியமங்கலம் எஸ்ஐடி வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த ஆக்கிரமிப்பு பகுதியில் முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரை அப்புறப்படுத்தும் பணி தொடரும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : shops ,service roadways ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி