×

3 நாட்களாக மின்சாரம் இல்லை சாலை மறியல் நடத்த முயன்ற மக்களிடம் போலீசார் சமரசம் திருவெறும்பூர் அருகே பரபரப்பு

திருவெறும்பூர், ஏப்.24:  திருவெறும்பூர் அருகே 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் சாலை மறியல் போராட்டம் நடத்த முற்பட்ட பொதுமக்களிடம் நவல்பட்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள எச்ஏபிபியில் இருந்து  பழங்கனாங்குடி செல்லும் சாலையில் சுமார் 200 குடும்பத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் போதிய மின் சக்தி கிடைக்காமல் அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அவதிபட்டு வந்தனர். இந்நிலையில் பழங்கனாங்குடி சாலை பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்து வந்தது. இது சம்பந்தமாக மின்வாரியத்திற்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து பழங்கனாங்குடி சாலையில் குவிய தொடங்கினர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்த முயன்ற பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு