×

தேர்தலை காரணம் காட்டி கர்நாடகாவிலிருந்து தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் தேர்தல் ஆணையத்துக்கு தமாகா மனு

திருச்சி, ஏப்.24:  தேர்தலை காரணம் காட்டி கர்நாடாகாவிலிருந்து தண்ணீர் திறக்காததால் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என தமாகா விவசாய அணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மாநில விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 25 லட்சம் ஏக்கருக்கு பாசன வசதி ஆதாரமாகவும், 24 மாவட்டங்களில் உள்ள 5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் காவிரியும், மேட்டூர் அணையும் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி ஆணையம் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலை உள்ளது. அதே நேரத்தில் கர்நாடகா அணைகளின் நீர் திருப்தியாக உள்ளது என கர்நாடாக அரசு தெரிவித்துள்ளது.

 தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54 அடியாகவும், 20 டிஎம்சியாகவும் உள்ளது. அணையின் பாதுகாப்புக்காக 7 டிஎம்சி போக மீதம் 13 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
இந்நிலையில் கர்நாடாகவில் உள்ள அணைகளிலிருந்து காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாத ஒதுக்கீடு 20 டிஎம்சி தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உடனடியாக கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும். மே, ஜூன் வரை குடிநீர் தேவைக்காகவும், ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கும் தண்ணீர் திறப்பை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : EC ,
× RELATED மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்...