பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி

மணப்பாறை, ஏப்.24:  மணப்பாறையை அருகே பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவையொட்டி மின் அலங்கார தேர் பவனி நடந்தது. மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு 10 மணி அளவில் ஏசுவின் திருப்பாடுகள் பாஸ்கா நடந்தது. மறுநாள் 22ம் தேதி இரவு ஏசுவின் உயிர்ப்பு பாஸ்கா  நடந்தது. இதனையடுத்து அதிகாலை தாரை தப்பட்டம் முழங்க வாண வேடிக்கையுடன் மின் அலங்கார தேர் பவனி நடந்தது. நேற்று மாலை பகலில் தேர் திருவிழா நடந்தது. இதில், கேடயத்தில், இருதய ஆண்டவர், புனித அந்தோணியார், புனித சந்தியாகப்பர் ஆகியோரும், முதல் சப்பரத்தில் புனித ராயப்பர், புனித இன்னாசியார், இரண்டாம் சப்பரத்தில் புனித சூசையப்பர், புனித செபஸ்தியார், மூன்றாம் சப்பரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா, புனித அருளானந்தர், நான்காம் சப்பரத்தில் உயிர்த்த ஆண்டவர், அன்னை மேரி மாதா ஆகியோர் சப்பரத்தில் ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக  வந்து ஆலயத்தை வந்தடைந்தது. சப்பரம் வரும்போது, கிறிஸ்தவர்கள்  திரளாக நின்று மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மை சார்லஸ், மணியம் பிரடெரிக் ஜோன்ஸ், கோவில்பிள்ளை சூசைமரி, கோல்காரர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் தலைமையில் ஊர் பொதுமக்கள், இளைஞர் பெருமன்றத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: