×

மன்னார்குடியில் சாலையோரம் தனியாக நின்ற சிறுவன் மீட்பு

மன்னார்குடி, ஏப். 24: மன்னார்குடி  ராஜகோபால சுவாமி கோயில் அருகில் நேற்று அதிகாலை சாலையோரத்தில் தனியாக நின்ற ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிறுவனை சில தொழிலாளர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் எதிரே காந்தி சிலை அருகில் நேற்று அதிகாலை சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க சிறுவன் சாலை ஓரம் தனியாக நின்றுள்ளான். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வெல்டிங் வேலைக்காக வந்திருந்த தொழிலாளர்கள் சிலர் டீ குடிப்பதற்காக காந்தி சிலை அருகில் வந்த போது சிறுவன் தனியாக நிற்பதை அறிந்து அவனை தூக்கி கொன்டு அருகில் இருந்த வீடுகளில் சிறுவனை காட்டி விசாரித்துள்ளனர். யாரும் சிறுவன் குறித்து சரியான தகவல் அளிக்காததால் தொழிலாளர்கள் சிறுவனை மன்னார்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து காவல் நிலையத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சிறுவனை அழைத்து வந்த தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவனை அழைத்து கொண்டு காந்தி சிலை அருகில் வந்து பார்த்தபோது அப்பகுதியில் இருந்த கடையின் வாசலில் சிறுவனின் உடைகள் மற்றும் பால் புட்டி ஒன்றும் கிடந்து ள்ளது.

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா முடிந்து தற்போது விடையாற்றி விழா நடந்து வருகிறது. இதனையொட்டி காந்தி சிலை எதிரில் பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் கடைகள் அமைத்துள்ளனர். பொருட்காட்சிக்கு வந்த யாரேனும் சிறுவனை விட்டு விட்டு சென்றார்களா அல்லது யாராவது சிறுவனை கடத்தி வந்து அப்பகுதியில் விட்டு சென்றார்களா என தெரியவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து மன்னார்குடி காவல் நிலையத்திற்கு வந்த  வந்த சைல்டு அமைப்பு பணியாளர்கள் பிரகலாதன், முருகேசன் ஆகியோரிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து சைல்டு லைன் பணியாளர்கள் சிறுவனை திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைத்தனர்.


Tags : road ,Mannar ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி