×

கூத்தாநல்லூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கூத்தாநல்லூர், ஏப். 24: கூத்தாநல்லூரை சுற்றியுள்ள லெட்சுமாங்குடி, அதங்குடி, வாழச்சேரி, பூதமங்கலம், மேலப்பனங்கட்டான்குடி, அக்கரைப்புதூர், பாண்டுகுடி, சேந்தமங்கலம், மாவட்டக்குடி, திருநெல்லிக்காவல், வடகோவனூர், திருராமேஸ்வரம், தண்ணீர்குன்னம், அய்யம்பேட்டை, அணக்கரை பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. மதியம் 1 மணியளவில் துவங்கிய மழை 3 மணிவரை தொடர்ந்து பெய்தது.
நேற்று பெய்த மழை மக்களுக்கு ஆறுதலை தந்தது. காலையில் அடித்த வெயிலின் உக்கிரத்தை கண்டு மழையை எதிர்பார்த்திராத மக்கள் வெளியே வந்த நிலையில் பெய்த மழை அனைவரையும் நனைய வைத்தது. சிறுவர்களும் பெரியவர்களும் வேறு வழியின்றி நனைந்தபடியே தங்கள் சாலைப்பயணத்தை தொடர்ந்தனர். மேலும் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடியே சென்றன. வயல்வெளிகளில் மழையால் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழை குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, கோடை காலத்தில் இப்படிப்பட்ட மழை விவசாயத்திற்கு பெரிய உதவியாக இருக்கும். ஏனென்றால் இப்போது கோடை உழவு செய்து நிலத்தை பண்படுத்த வேண்டிய காலம், இந்த மழை கோடை உழவு செய்ய ஏற்றதாக நிலத்தை மாற்றித்தரும். மேலும் மழைநீர் தற்போது கோடையில் வயல்களில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புக்களின் வழியே நிலத்தின் அடியில் சென்று நிலத்தின் தன்மையை விளைச்சலுக்கு ஏற்றபடி பண்படுத்தும். இந்த மழை ஒருநாள் மட்டும் அல்லது தொடர்ந்து கோடைகாலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பெய்யுமானால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல மகசூலைத்தரும். தற்போது கோடைக்காலப்பயிராக சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பருத்தி பூக்கும் தருவாயில் உள்ளதால் இன்று பெய்த மழை அதற்கும் ஏற்றதாக அமைந்திருக்கிறது. மேலும் கோடை வெயிலின் தாக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் கால்நடைகளுக்கும் இந்த மழை குளிர்ச்சியை தரும் என்றனர்.

Tags : Rainfall farmers ,area ,Koodanallur ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...