×

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம்விவசாயிகளிடம் 80 மெ.டன் பச்சை பயிறு கொள்முதல் கண்காணிப்பாளர் தகவல்

திருவாரூர், ஏப். 24: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமாக  விவசாயிகளிடமிருந்து  80 மெ.டன்  பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக உளுந்து மற்றும் பச்சை பயிறு மற்றும் பருத்தி வகைகளை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக கொள்முதல் செய்வதை போன்று தற்போது டெல்டா மாவட்டங்களில் விளையும் உளுந்து மற்றும் பச்சை பயிர்களையும் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலமாக அரசால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் பணி கடந்த 1ம் தேதி முதல் துவங்கி உள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி மற்றும் வடுவூர் ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இந்த பணிகள் துவங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் உளுந்தும், 5 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் பச்சை பயிறும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.56 விலையிலும், பச்சை பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ.69.75 விலையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 12 சதவிகிதத்திற்குள்  ஈரப்பதம்  இருக்க வேண்டும். மேலும் பூச்சி மற்றும் வண்டுகள் இல்லாமல் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக  நகல், சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றுடன்  கொள்முதலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதற்கான தொகை என்பது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்ற நிலையில் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வாயிலாக நேற்று (23ம் தேதி) வரை 90 விவசாயிகளிடமிருந்து 80 மெ.டன் பச்சை பயிறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு செந்தில்முருகன் தெரிவித்துள்ளார்.

Tags : Trivandrum Regulatory Prospectus Citizen ,Mt Green Purchase Supervisor ,
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...