850 ஆண்டுகள் பழமை வாய்ந்தது பராமரிப்பின்றி கிடக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

சின்னசேலம், ஏப். 24:   உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதால் அதை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னசேலம் அருகே உலகியநல்லூரில் சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 1184ம் ஆண்டு வீரராசேந்திர சோழன் என்கிற மூன்றாம் குலோத்துங்க மன்னன் உத்தரவுப்படி மகதை மண்டலத்தை ஆண்ட வாணகோவரையனால் கட்டப்பட்டது. இந்த கோயிலின் வெளிப்புறத்தில் ஏழுநிலை உடைய கோபுரம், உள்புறத்தில் 3 நிலை உடைய கோபுரம், பிரசன்ன நாயகி, 63 நாயன்மார்கள் சிலை ஆகியவை உள்ளது. இந்த கோயிலில் ஒரு வருடத்திற்கு  50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலை வணங்கினால் திருமண தோஷம் நீங்கி, திருமணம் கைகூடும். நாக தோஷம் நீங்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ர தரிசனம், பொங்கலன்று நடக்கும் சாமி ஊர்வலம், கார்த்திகை மாதம் நடக்கும் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சி ஆகியவை சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் உள்ளே உள்ள நடராஜர் மண்டபம் இடிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  இக்கோயிலின் உள்ளே உள்ள குளம், உள்பிரகாரம், மடப்பள்ளி, யாகசாலை ஆகியவை சேதமடைந்துள்ளது. கோயிலின் உள்பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் 63 நாயன்மார்களில் சுமார் 17 நாயன்மார்கள் சிலையை காணவில்லை. போதுமான தண்ணீர் வசதி இல்லை. அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலின் கொடிமர பீடம் மட்டுமே உள்ளது. அதைப்போல இந்த கோயின் நுழைவு வாயில் மரகதவு உள்ளிட்ட 6 கதவுகள் மக்கிய நிலையில் உள்ளது. திருமண வைபவ நிகழ்ச்சிக்கு பெயர்போன இந்த கோயிலில் சில குறைபாடுகள் உள்ளதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும் இணைந்து உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று 50 கிராம மக்கள்

எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: