திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலையில் தேங்கிய கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவெண்ணெய்நல்லூர், ஏப். 24:  திருவெண்ணெய்நல்லூர் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள கோயில் தெருவில் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் வாய்க்கால் நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதி மக்கள் அந்த தண்ணீரிலேயே நடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் சிறுவர், சிறுமியர், குழந்தைகள், முதியவர் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என அனைவருக்கும் தொற்று நோய், மர்மகாய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். எனவே அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: