×

விழுப்புரத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு டவுன் பஸ் ஜப்தி

விழுப்புரம்,  ஏப். 24:   விழுப்புரத்தில் நஷ்டஈடு வழங்காத அரசு டவுன் பஸ் ஜப்தி  செய்யப்பட்டதால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள்  பாதிக்கப்பட்டனர்.விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்  பாலமுருகன்(32). இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி காட்பாடி  ரயில்வே கேட்டிலிருந்து விழுப்புரம் நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்.  அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே  அவர் உயிரிழந்தார். இதனிடையே விபத்து ஏற்படுத்திய விழுப்புரம்  அரசு போக்குவரத்துக்கழகம் உரிய இழப்பீட்டுத்தொகையை வழங்கக்கோரி பாலமுருகனின் மனைவி சாரதா விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்கை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  அப்போதைய நீதிபதி தர் ரூ.7,36,800 வழங்க வேண்டும் என்று  அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு கடந்த 2015ம் ஆண்டில் உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடு வழங்காமல் காலம்தாழ்த்தி வந்ததால் மீண்டும்  கட்டளை நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தற்போதைய  நீதிபதி அருணாசலம் வட்டியுடன் சேர்த்து ரூ.10,33,646 வழங்க வேண்டும்.  அப்படிபணம் கொடுக்காத பட்சத்தில் பேருந்தை ஜப்தி செய்ய கடந்த வாரம்  உத்தரவிட்டார். ஆனால் அதன்பிறகும் பணம் வழங்காததால் நேற்றைய தினம் நீதிமன்ற ஊழியர்கள்  விழுப்புரம் புதிய பேருந்துநிலையத்திலிருந்து பெரியசெவலைக்குச் சென்ற அரசு  டவுன் பஸ்சை ஜப்தி செய்தனர். கிராமப்புறத்திற்கு செல்லும் ஒரு  பேருந்தும் ஜப்தி செய்யப்பட்டதால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளானார்கள்.


Tags : Town Bus Japti ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை