உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் மின்மோட்டார்கள் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு

உளுந்தூர்பேட்டை, ஏப். 24: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் சுமார் 25க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளது இதில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு கெடிலம், சேந்தநாடு, மட்டிகை உள்ளிட்ட பகுதியில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு வந்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்த குடிநீர் வினியோகம் பொதுமக்களுக்கு பற்றாக்குறையாக இருந்ததால் அன்னைசத்யா தெரு, கந்தசாமிபுரம் உ.கீரனூர், உளுந்தாண்டார்கோயில், பழைய தபால் ஆபீஸ் தெரு, முருகன் கோயில் தெரு, பிரகாசம் நகர், ராம் நகர் உள்ளிட்ட அனைத்து வார்டு பகுதியிலும் 40க்கும் மேற்பட்ட மினி குடிநீர் டேங்க்குகள் அமைத்து ஆழ்துளை போர்கள் போடப்பட்டு அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம்

செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடகாலமாக இந்த மினிடேங்க்குகள் அனைத்தும் போதிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் 25க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மினிடேங்க் மின் மோட்டார்கள் பழுதாகி போனது. இதனை சீரமைக்காத காரணத்தினால் இந்த மினி டேங்க்குகள் அனைத்தும் தற்போது குப்பை கொட்டும் இடமாக உள்ளது.  தற்போது கோடை வெயில் துவங்கி உள்ளதாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் வீடுகளில் உள்ள ஆழ்துளை போர்களில் தண்ணீர் இல்லாமல் போனதால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் தண்ணீர் வரக்கூடிய மினி டேங்க் மின் மோட்டார்களை சீரமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: