×

சிதம்பரம் நகரில் தண்ணீர் பஞ்சம் வீராணம் ஏரி குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்


சிதம்பரம், ஏப். 24: சிதம்பரம் நகரில் குளங்கள் வறண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1911ம் ஆண்டில் சிதம்பரம் நகரில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வக்காரமாரி கிராமத்தில் இரு குளங்கள் வெட்டப்பட்டு அதில் தண்ணீர் தேக்கப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கோடை காலங்களில் குளம் வற்ற தொடங்கியதால் அப்பகுதியில் சில இடங்களில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது வக்காரமாரி குளங்கள் இரண்டும் வற்றத்தொடங்கியதால் அருகில் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் இருந்து இரண்டு குளங்களிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரும் குறைந்து வருவதால் சிதம்பரம் நகருக்கு வழங்கப்படும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிதம்பரம் நகரில் காலை, மாலை இரு வேளை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது காலை வேளையில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. விரைவில் சிதம்பரம் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சிதம்பரம் பகுதிக்கு குடிநீர் அளிக்க புதிய திட்டம் ஒன்று தற்போது அதிகாரிகளின் ஆய்வில் உள்ளது. ஆகையால் வீராணம் ஏரியில் இருந்து சிதம்பரம் நகருக்கு குடிநீர் கொண்டு வரும் புதிய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Tags : city ,Chidambaram ,Veeranam lake ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...