×

வீட்டு மனையாக மாறும் விளைநிலங்கள்

நெய்வேலி, ஏப். 24: நெய்வேலி என்எல்சி நிறுவனம் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் இல்லாமல், நெய்வேலி ஒட்டிய பகுதியான என்எல்சி ஆர்ச் கேட், வடக்குத்து ஊராட்சியில் பல்வேறு நகர் பகுதிகளில் வீடுகள், விளைநிலங்களை விலைக்கு வாங்கி  நிரந்தரமாக தங்கி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் மனைகளின் விலையும் உயர்ந்து விட்டது.இதனை சாதகமாக பயன்படுத்தி ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வடக்குத்து, கீழக்கொல்லை, வேகாக்கொல்லை, ஆயிப்பேட்டை, கீழுர், மருங்கூர் போன்ற கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் அழித்தும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். குறிப்பாக வடக்குத்து ஊராட்சியில் உள்ள நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தும் இங்குள்ள மனைகளை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.  விவசாயத்தில் உரிய லாபம் இல்லாமல் நஷ்டத்தில் இருக்கும் விவசாயிகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி விளை நிலத்தை வாங்கி விடுகின்றனர்.மேலும் விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மருங்கூர் கிராமத்தில் இருந்து வடக்குத்து வரை உள்ள கிராம பகுதிகளில் இரு புறங்களில் உள்ள முந்திரி மற்றும் விவசாய விளை நிலங்கள், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதுபோன்று  அனைத்து விளைநிலங்களும் வீட்டு மனையாக மாற்றப்பட்டால் நெய்வேலி பகுதியில் விவசாய தொழில் முற்றிலுமாக மறைந்து போகும் சூழ்நிலை ஏற்படும். விவசாய நிலத்தை விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



Tags : Home farms ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு