×

கெடிலம் ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை

பண்ருட்டி, ஏப். 24: பண்ருட்டி அருகே சிறுவத்தூர் கிராமத்திலிருந்து பண்ருட்டி வரையில் உள்ள கெடிலம் ஆற்றங்கரை மணல் கொள்ளையர்களால் சுமார் 5 கிலோமீட்டர் வரை பலமிழந்து காணப்படுகிறது. இப்பகுதியில் தண்ணீரை சேமிக்க நீண்ட கால போராட்டத்திற்கு பின்னர் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் அருகே மணல் கொள்ளை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் அதிக விலை கொடுத்து மணலை வாங்குகின்றனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எவ்வித அனுமதியும் பெறாமல் பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் மணலை எடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இதில் வருவாய் துறையினர் எந்த கண்காணிப்பும் செய்வதில்லை. இதனை பயன்படுத்தி பண்ருட்டி கெடிலம் பாலத்திலிருந்து சிறுவத்தூர் வரை ஆற்றின் கரையின் அடி பாகத்திலிருந்தே மணல் தோண்டப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது.இதேபோல் பணிக்கன்குப்பம் பகுதியில் கரையின் அருகிலேயே மணல் தோண்டி எடுக்கப்படுகிறது. தடுப்பணை அருகிலேயே மணல் எடுப்பதால் மழை காலங்களில் தண்ணீர் வரும்போது ஒரு சொட்டு தண்ணீர் கூட சேமிப்பில் இல்லாமல் கரைகள் உடைந்து வெளியேறும் அபாயம் உள்ளது.ஆற்றின் கரை பலமாக இருந்தால்தான் வெள்ள காலங்களில் விவசாய பயிர்கள், ஊர் பொதுமக்களை காப்பாற்ற முடியும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் திருட்டு மணல் சம்பந்தமாக பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆற்றை பராமரித்து காக்க வேண்டிய அனைத்து அரசு துறைகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்தால் மட்டுமே ஆற்றை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadedal ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது