×

காற்றில் பறந்த அதிகாரிகள் உத்தரவு கடலூரில் பயனற்ற பயணியர் நிழற்குடை

கடலூர், ஏப். 24: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அனைத்து பேருந்துகளும் பயணியர் நிழற்குடைக்குள் வந்து செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் விதிகளை மீறி சாலையிலேயே பேருந்துகள் நிறுத்தப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர் நகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், செம்மண்டலம், சாவடி, புது நகர் உள்ளிட்ட இடங்களில் பிரதானமாக பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. பேருந்து நிறுத்தங்களில் சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் நின்று செல்வது வழக்கம். இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் வசதிக்காக பல லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் உரிய பராமரிப்பு இல்லாததால் வீணாகி வருகிறது.இதுபோல், கடலூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி உள்ளிட்ட இடங்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் நின்று செல்ல பாரதி சாலை மஞ்சக்குப்பத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் எந்த பேருந்தும்  நிழற்குடைக்கு வந்து செல்லாமல் பாரதி சாலையில் ஒரு பகுதியிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி சென்றனர். இதனால் நிழற்குடைக்குள் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியது. மேலும் பாரதி சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியது.

இதுகுறித்த தொடர் புகார் காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், அனைத்து பேருந்துகளும் நிழற்குடைக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஒரு சில நாட்களே இந்த விதிமுறைகளை பின்பற்றிய பேருந்து ஓட்டுநர்கள் பின்னர் பிரதான சாலையிலேயே பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் நிலையை தொடர்கின்றனர்.
இதனால் பேருந்து நிழற்குடை பயனற்ற நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும், விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு