×

சட்டத்தை யார் மீறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

கடலூர், ஏப். 24: கடலூர் மாவட்ட எஸ்.பி. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் நீர்வளம், நிலவளம், கனிமவளம் மற்றும் தொழில்வளம் உள்ள மாவட்டமாகும். இருப்பினும் மனிதவள மேம்பாடு திறன் குறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாவட்டமாகவே இருந்து வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் மாநிலத்தில் கடலூர் மாவட்டம் 26வது இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமது மாவட்டத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததே. சில சமூக விரோதிகள் அப்பாவி இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் சில பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் வன்முறையை தூண்டும் வகையான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உள்நோக்கம் புரியாமல் படித்த இளைஞர்கள் அதனை பிறருக்கு அனுப்பி வைப்பதால் அவரை அறியாமலேயே அந்த குற்ற செயலுக்கு உடந்தையாக செயல்பட்டதாக கருதி வழக்குகளில் சிக்கி கொள்கிறார்கள். இதனால் இளைஞர்களின் பொன்னான எதிர்காலம் பாழாகி விடும் என்பதை உணர்ந்து தேவையில்லாத பதிவு மற்றும் பகிர்வை சமூக வலை தளங்களில் பரவச் செய்யக்கூடாது.

சமீபத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் அனைத்து தேர்ச்சியில் தகுதி பெற்றிருந்தாலும், அவர்களில் படித்த 10 இளைஞர்கள் மீது முன்பே காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பணியில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இளைஞர்களின் நற்சிந்தனை திசை மாற்றப்பட்டு நமது இளைஞர் உழைப்பு முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது.
எனவே நமது மாவட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வரும் செய்தியை கண்டு உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக உறுதி செய்து கொண்டு சட்ட ரீதியாக காவல்நிலையத்தை அணுக வேண்டும். யார் சட்டத்தை மீறினாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்