×

ஆத்தூர், வாழப்பாடியில் நடந்த நகை கொள்ளை வழக்குகளில் துப்பு கிடைக்காமல் திணறும் போலீசார்

சேலம், ஏப்.24:  சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி உட் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து 5 கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள், நகை, பணத்தை அள்ளிச்சென்றிருந்தனர். வாழப்பாடி அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவரது வீட்டில் சுமார் 55 பவுன் நகையும், ஆத்தூர் விநாயகபுரத்தில் ஆடிட்டர் சரவணன் வீட்டில் 30 பவுன் நகையும் கொள்ளை போனது. இதேபோல், தலைவாசலில் லாரி அதிபர் வீட்டில் 35 பவுன் நகையும், ஏத்தாப்பூர், வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் மேலும் 2 நகை, பணம் கொள்ளை சம்பவமும் நடந்தது. இந்த வழக்குகளில் கொள்ளையர்களை பிடிக்க வாழப்பாடி, ஆத்தூர் உட்கோட்டங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், 4 மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரையில் எவ்வித துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும், இக்கொள்ளை வழக்குகளை போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், அந்த பணிக்கு அனைத்து போலீசாரும் அனுப்பப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையில், மீண்டும் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க தனிப்படையை துரிதப்படுத்த வேண்டும். ஆனால், உயர் அதிகாரிகள் வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால், கொள்ளை வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் யாரும் இதுவரையில் சிக்காததால், மீண்டும் கொள்ளை சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால், அந்த வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் துரிதம் காட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரை துரிதப்படுத்தி, வழக்குகளில் துப்பு துலக்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாழப்பாடி, ஆத்தூர், ஓமலூர் பகுதியில் நடந்த கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விரைவில் கொள்ளை கும்பலை பிடித்து விடுவோம்,’’ என்றனர்.

Tags : Police detainees ,Attur ,
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...